நிதிநிறுவன அதிபர் கடத்தல்: எஸ்பி தீவிர விசாரணை
பாதரையில் நிதி நிறுவன அதிபர் கெளதம் என்பவரை மிளகாய் பொடி தூவி காரில் கடத்தி சென்ற மர்ம நபர் கும்பல் குறித்து மாவட்ட எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.
நாமக்கல் மாவட்டம் வெப்படை பாதரை பகுதியை சேர்ந்தவர் கெளதம். நிதி நிறுவன அதிபரான இவர் வெப்படையில் கடந்த 6 வருடங்களாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கெளதம் வீட்டின் அருகே காருடன் நின்று கொண்டிருந்த மர்ம கும்பல், கெளதமை தாக்கி விட்டு, மிளகாய் பொடியை தூவி இருசக்கர வாகனத்துடன் காரில் கடத்தி சென்றனர்.
இதன் பின்னர் நீண்ட நேரமாகியும் கெளதம் வீடு திரும்பததால், மனைவி திவ்யாவிற்கு கெளதம் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து வெப்படை காவல் நிலையத்தில் திவ்யா கொடுத்த புகாரின்பேரில், வெப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்தை பார்வையிட்டு, கெளதம் அணிந்து இருந்த செருப்பு, ரத்தகரை, உடைந்த கண்ணாடி உள்ளிட்ட தடயங்களை சேகரித்தும் மனைவி மற்றும் கெளதம் பெற்றோர் உள்பட உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே கடத்தப்பட்ட நிதி நிறுவன உரிமையாளரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட கெளதம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகியாக இருப்பதால் கட்சி நிர்வாகிகள் காவல் நிலையம் முன்பு குவிந்து வருவைத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.