பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய மாற்றம்

தமிழகத்தில் ஒரே நாளில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், ஆசிரியர்கள் கோரிக்கை;

Update: 2025-03-20 07:20 GMT

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மாநிலம் முழுவதும் ஒரே நாளில் முடிக்க கோரிக்கை

நாமக்கல்: நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, "பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை தமிழகம் முழுவதும் ஒரே நாளில் முடிக்க வேண்டும்" என்று கோரி தமிழக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளார். அடுத்த வாரம் தொடங்கவுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மதிப்பீட்டு மையங்களில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடைத்தாள்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்றும், ஒரு மையத்தில் கூடுதல் விடைத்தாள்கள் இருந்தால் அதனை மாவட்டத்தில் உள்ள வேறு மையத்திற்கு மாற்ற வேண்டுமேயொழிய, ஆசிரியர்களை ஒரு மையத்திலிருந்து மற்றொரு மையத்திற்கு மாற்றக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களை அமைக்கக்கூடாது என்றும், தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் நடத்தும் அனுபவம் மிக்க ஆசிரியர்களை மட்டுமே விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரியுள்ளார். கூடுதல் விடைத்தாள்களை திருத்த வேண்டிய பணிச்சுமையால் தவறுகள் ஏற்பட்டு, 2024ல் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். சில ஆண்டுகளில் மே முதல் வாரம் வரை விடைத்தாள் திருத்தும் பணி நீடித்ததால் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டதாகவும், எனவே மாநிலம் முழுவதும் ஒரே நாளில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முடிவடையும் வகையில் திட்டமிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News