நாமக்கல் மாநகராட்சியில் வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் ஜப்தி
நாமக்கல் மாநகராட்சியில் கடும் நடவடிக்கை, வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் ஜப்தி;
நாமக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட இனங்களில் இதுவரை 78 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திருத்திய சட்டப்படி, வரி மற்றும் கட்டணங்களை செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைந்துள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் உத்தரவின்படி, திருச்சி சாலை, தூபன் குமாரமங்கலம் தெரு மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் வரி செலுத்தாத கடைகளில் ஜப்தி நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன. இந்நோட்டீஸில், 24 மணி நேரத்திற்குள் வரி நிலுவையைச் செலுத்தாவிட்டால், அசையா சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், வரி செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகளும் துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.