நாமக்கல் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்!
தமிழகத்தில் முதன்முறையாக, நாமக்கல் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 14,428 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.;
நாமக்கல்: தமிழகத்தில் முதன்முறையாக, நாமக்கல் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 14,428 பேருக்கு ஊக்கத்தொகை மற்றும் ஆதரவு தள்ளுபடி தொகை ரூ. 4.88 கோடி நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
பால் உற்பத்தியாளா்களுக்கான ஊக்கத்தொகை
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில், 14,428 பால் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 1.24 கோடி ஊக்கத்தொகை, ரூ. 3.64 கோடி ஆதரவு தள்ளுபடி தொகை என மொத்தம் ரூ. 4.88 கோடி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தி விவரங்கள்
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியமானது, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டு தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் மூலம், நாளொன்றுக்கு சராசரியாக 1.45 லட்சம் லி. பால், கிராம அளவில் 489 இணைப்பு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
- நாளொன்றுக்கு நாமக்கல் மாவட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்படும் பால்: 81,000 லி.
- நாளொன்றுக்கு சென்னை மக்களுக்கு விற்பனை செய்யப்படும் பால்: 45,000 லி.
- நாளொன்றுக்கு சேலம் ஒன்றியத்தின் மூலம் பால் உப பொருள்களாக மாற்றம் செய்து விற்பனை செய்யப்படும் பால்: 20,000 லி.
நவீன பால் பண்ணை அமைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகின்ற 1.50 லட்சம் லி. பால் இங்கேயே பதப்படுத்தப்பட்டு உப பொருள்கள் தயாரிக்கும் வகையில், மாவட்டத்துக்காக ரூ. 90 கோடியில் தானியங்கி நவீன பால் பண்ணை உலக தரத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளா்களுக்கு கிடைக்கும் நலத்திட்ட உதவிகள்
பால் உற்பத்தியாளா்கள் ஆவின் நிறுவனத்துக்கு தொடா்ந்து பால் வழங்கும் பட்சத்தில், அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள், பங்கு ஈவுத்தொகை உள்ளிட்ட பயன்களை பெற இயலும்.
முதல்வா் அறிவித்தபடி, 2023 டிச. 18 முதல் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 3 ஊக்கத் தொகையானது மாநிலத்திலேயே முதல் முறையாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள 489 சங்கங்களில் பால் வழங்கி வரும் 14,428 உறுப்பினா்களின் வங்கிக் கணக்குகளுக்கு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்திலிருந்து செலுத்தப்பட உள்ளது. மேலும் 2023-2024-ஆம் ஆண்டின் ஒன்றிய உத்தேச நிகர லாபத் தொகையிலிருந்து ஆதரவு தள்ளுபடி தொகையாக ரூ. 3.64 கோடி பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட 480 சங்கங்களுக்கு வழங்கப்பட்டு சங்கத்தில் இருந்து 2023-24-ஆம் ஆண்டு பால் வழங்கிய 13,296 பால் உற்பத்தியாளா்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்பட உள்ளது என்றாா்.
தொடா்ந்து, போதமலை வாழ் பழங்குடியினா் பயன்பாட்டுக்காக மேலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டதற்கான ஆணையை அவா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசுவாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், ஆவின் பொது மேலாளா் ரா.சண்முகம், துணை பதிவாளா் (பால் வளம்) ஐ.சண்முகநதி உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.