நீலகிரி மாவட்டத்தில் மழை: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-10-04 09:15 GMT

மஞ்சூரில் இருந்து, கோவை மாவட்டம் காரமடைக்கு செல்லும் சாலையில்,  முள்ளி பகுதியில் முறிந்து விழுந்துள்ள மரம்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மஞ்சூரில் இருந்து கோவை மாவட்டம் காரமடைக்கு செல்லும் சாலை முள்ளி பகுதியில்,  ஒரே இடத்தில் 4 மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மஞ்சூரை நோக்கி வந்த அரசு பஸ், சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  மழை தொடர்ந்ததால், வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் மரங்களை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, 20 பயணிகளுடன் அரசு பஸ் மஞ்சூருக்கு செல்ல முடியாமல், மீண்டும் காரமடைக்கு சென்றது. அங்கிருந்து மேட்டுப்பாளையம், பர்லியார், காட்டேரி வழியாக மஞ்சூருக்கு, 5 மணி நேரம் தாமதமாக வந்தது. மரங்கள் விழுந்ததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். சுற்றுலா வாகனங்களும் திருப்பி விடப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது, மாநில நெடுஞ்சாலை துறை சாலைப்பணியாளர்கள்,  பொக்லைன் எந்திரம் மூலம் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்களை, வெட்டி அப்புறப்படுத்தினர். அதை தொடர்ந்து போக்குவரத்து சீராகி இயல்பு நிலை திரும்பி இருக்கிறது.

Tags:    

Similar News