ஆலமரத்தடியில் சிக்னல் இன்றி தவித்த மாணவர்கள்; ரூ.35 லட்சத்தில் புதிய செல்போன் டவர்
ராசிபுரம் அருகே ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பில் படித்த மாணவர்களுக்காக ரூ.35 லட்சத்தில் செல்போன் டவர் துவக்க விழா நடைபெற்றது.
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால், கடந்த 17 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மாணவர்கள் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளை கவனித்து படித்து வந்தனர்.
இந்நிலையில் ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை அருகில் உள்ள பெரியகோம்பை மற்றும் பெரப்பஞ் சோலை பகுதியில் செல்போன் டவர் இல்லாததால், சிக்னல் கிடைப்பதற்காக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆலமரத்தில் ஏறி ஆபத்தான நிலையில் ஆன் லைன் கிளாஸ் படித்தனர்.
இது சம்மந்தமான செய்தி அனைத்து மீடியாக்களிலும் வைரலாக பரவியது. இதையொட்டி தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆகியோர் அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுத்தனர்.
மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவின்படி, புதிதாக 40 அடி உயரத்தில் 3 கிலோ மீட்டர் தூரம் செல்போன் சிக்னல் கிடைக்கும் வகையில் தனியார் செல்போன் கம்பெனி மூலம் ரூ.35 லட்சம் மதிப்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. அந்த டவரை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங், மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூறுகையில், நீண்ட காலமாக செல்போன் டவர் வசதி இல்லாமல் தவித்து வந்தோம் தற்போது டவர் கிடைத்ததால் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாகவும், இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்கள்.