நாமக்கல் மாவட்டத்தில் தொழில் துவங்க விருப்பமுள்ளோருக்கு 28ம் தேதி சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் தொழில் துவங்க விருப்பமுள்ளோர்களுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது.

Update: 2022-10-17 10:30 GMT

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

நாமக்கல் மாவட்டத்தில் தொழில் துவங்க விருப்பமுள்ளோர்களுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில், வருகிற 28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வேலை வாய்ப்பற்ற இளையோர் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில், தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின், மாவட்ட தொழில் மைய அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில், தங்களது தகுதிக்கேற்ற திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து, தாங்கள் முனைகிற தொழில்களைத் துவக்க தேவையான கடனுதவி பெறுவதற்கான வாய்ப்பு, வசதிகள் உருவாக்கித் தரப்படும்.

* புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) :

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்து தொழில்சார்ந்த் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 21 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் 45 வயது வரையிலும் தகுதியானவர்கள். உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் ரூ.10 லட்சம் முதல் 5 கோடி வரை தொழில் துவங்கலாம். திட்ட மதிப்பீட்டில் சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும், பொதுப் பிரிவினர் 10 சதவீதமும் சொந்த முதலீடு செய்ய வேண்டும். நிலம், கட்டிடம், மற்றும் இயந்திரங்கள் அடங்கிய திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அததிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை மானியம் பெறலாம். 3 சதவீதம் பின்முனை வட்டி மானியம் பெறலாம். தகுதியானவர்கள் எம்எஸ்எம்இஆன்லைன்.டிஎன்.ஜிஓவி.இன்/நீட்ஸ் என் வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்.

* வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யுஒய்இஜிபி) :

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் 45 வயது வரையிலும் தகுதியானவர்கள். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் குறைந்து 5 ஆண்டுகளுக்கு குறையாமல் வசித்திருக்க வேண்டும். வியாபாரம் சார்ந்த தொழில்கள் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் துவங்கலாம். திட்ட மதிப்பீட்டில் சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும், பொதுப் பிரிவினர் 10 சதவீதமும் சொந்த முதலீடு செய்ய வேண்டும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அததிகபட்சசமாக ரூ. 1.25 லட்சம் வரை மானியம் பெறலாம். தகுதியானவர்கள் எம்எஸ்எம்இஆன்லைன்.டிஎன்.ஜிஓவி.இன்/யுஒய்இஜிபி என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்.

* பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பிஎம்இஜிபி):

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச கல்வித்தகுதி தேவையில்லை. தொழில் பிரிவில் ரூ. 10 லட்சத்திற்கு அதிகமாகவும், சேவைப்பிரிவில் ரூ.5 லட்சத்திற்கு அதிகமாகவும், கடன் தேவைப்படுவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18, உற்பத்தி தொழில்கள் ரூ.50 லட்சம் வரையிலும், சேவைத்தொழில்கள் ரூ.20 லட்சம்வரையிலும் துவக்கலாம். திட்ட மதிப்பீட்டில் சிறப்புப் பிரிவினர் 5 சதவீதமும், பொதுப்பிரிவினர் 10 சதவீதமும் சொந்த முதலீடு செய்ய வேண்டும். நகர்ப்புர பொதுப்பிரிவினருக்கு 15 சதவீதமும், சிறப்புபிரிவினருக்கு 25 சதவீதமும், கிராமப்புற பொதுப் பிரிவினருக்கு 25 சதவீதமும், சிறப்புப் பிரிவினருக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படும். தகுதியானவர்கள்: எம்எஸ்எம்இஆன்லைன்.டிஎன்.ஜிஓவி.இன்/யுபிஎம்இஜிபி என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி, எஸ்டி பிரிவினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலித்தவர் ஆகியோர் சிறப்புப் பிரிவினராகக் கருதப்படுவார்கள். தொழில் துவங்க விருப்பமுள்ளோர், இந்த நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News