5ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொள்ள வேண்டும் : கொங்கு ஈஸ்வரன் எம்எல்ஏ வேண்டுகோள்

வருகிற 5ம் தேதி தமிழக முதல்வர் கூட்டியுள்ள கூட்டத்தில், தமிகத்தின் நலன் கருத்தி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2025-03-02 04:30 GMT

இ.ஆர்.ஈஸ்வரன், எம்எல்ஏ., கொமதேக பொதுச்செயலாளர்.

நாமக்கல்,

வருகிற 5ம் தேதி தமிழக முதல்வர் கூட்டியுள்ள கூட்டத்தில், தமிகத்தின் நலன் கருத்தி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வருகிற மார்ச் 5ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டம் தமிழ்நாட்டின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற கூட்டம். பார்லிமெண்ட் லோக்சபா தொகுதி மறு சீரமைப்பை மக்கள் தொகை அடிப்படையில் செய்யக்கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு. அதை எடுத்துச் சொல்லத்தான் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டியுள்ளார். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள மாற்றுக் கருத்து உடையவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல தயாராகி வருகின்றனர். கொமதேக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும். அரசியல் ரீதியாக எதிரணிக்கு தலைமை தாங்குபவர்களும் அந்த அணியில் இருக்கும் மற்றவர்களும் கூட்டத்திற்கு வருவதை உறுதி செய்திருக்கிறார்கள். சென்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணியில் இருந்தவர்கள் கூட இந்த கூட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளனர். பார்லி தொகுதி மறு சீரமைப்பு தேவைதான் என்றாலும் மக்கள் தொகை அடிப்படையில் இருக்கக் கூடாது.

50 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் உருவாக்கப்பட்டு இருந்தாலும் அதற்குப் பிறகு இந்திய மக்கள் தொகையை குறைப்பதற்காக குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டுமென்று அப்போதைய மத்திய அரசு மாநில அரசுகளை நிர்ப்பந்தம் செய்தது. தென் மாநிலங்கள் நாட்டினுடைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்கள் தொகையை குறைத்தன. தென் மாநிலங்களின் தீவிர செயல்பாடுகள் தான் இந்த அளவிற்கு இந்தியாவினுடைய மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்து, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவியிருக்கிறது. வடமாநிலங்களைப் போல கட்டுப்பாடு இல்லாமல் மக்கள் தொகையை பெருக்கியிருந்தால் இந்தியாவினுடைய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கும். உலக நாடுகளோடு போட்டி போட்டுக்கொண்டு பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறியுள்ளது. அதற்கு தென் மாநிலங்களுடைய வளர்ச்சி தான் காரணம். அதற்கு தண்டனையாக நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பில் தென் மாநிலங்களின் தொகுதிகளை குறைக்க முயற்சிப்பது மத்திய அரசு மீது இருக்கின்ற நம்பிக்கையை சிதைப்பதாகும்.

இப்படிப்பட்ட சூழலில் மத்திய அரசின் இந்த முயற்சிகளை தடுத்து நிறுத்த, தமிழகத்தினுடைய அனைத்து அரசியல் கட்சிகளும், மொத்த தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டு உரிமைக்குரல் எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசியல் நிலைப்பாடுகள் எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டின் நன்மைக்காக முதலமைச்சர் கூட்டியிருக்கின்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ள, அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளேன். இதில் கூட அரசியல் செய்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்பவர்களை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதைப் புரிந்து கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்பவர்கள் மறு பரிசீலனை செய்து அவசிய கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News