சீரான குடிநீர் வினியோகம் செய்யாததால் அவினாசிப்பட்டி கிராம மக்கள் அவதி
3 மாதங்களாக சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால், அவினாசிப்பட்டி ஊராட்சி 6வது வார்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.;
மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் அவினாசிப்பட்டியில், சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், பொதுமக்கள் சைக்கிள்களில் சுமார் 2 கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அவினாசிப்பட்டி பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்து 6வது வார்டில் 70க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் வசதிக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்நது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில், சரிவரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், 6வது வார்டு மக்கள் பல கி.மீ., தூரம் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அவினாசிப்பட்டி 6வது வார்டு மக்கள் கூறியதாவது: அவினாசிப்பட்டி 6வது வார்டில் கடந்த 3 மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் 2 கி.மீ., தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. பைக் அல்லது சைக்கிளில் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்கள். இச்சூழலில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் தண்ணீருக்காக வெகு தொலைவு சென்று வருவதால் உடல்நிலை மற்றும் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், குடிநீர் பிரச்சினையால் மாணவ, மாணவியர் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலையும் உள்ளது. இதனை மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் கவனத்தில் கொண்டு, உடனடியாக சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.