நாமக்கல் மாவட்டத்தில் கனவு இல்லம் திட்டத்தில் 5.800 பேருக்கு ரூ. 204.74 கோடி ஒதுக்கீடு : ராஜேஸ்குமார், எம்.பி. தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக, 5,800 பேருக்கு ரூ. 204.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, எம்.பி., ராஜேஷ்குமார் கூறினார்.;
நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்களை, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் வழங்கினார். அருகில் கலெக்டர் உமா, எம்.பி. மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக, 5,800 பேருக்கு ரூ. 204.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, எம்.பி., ராஜேஷ்குமார் கூறினார்.
நாமக்கல் கலெக்டர் ஆபீசில், வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 217 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜ்யசபா எம்.பி., ராஜேஸ்குமார், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற பின், அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். மேலும், கிராமப்புற ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை நனவாக்கும் வகையில், கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 204.74 கோடி மதிப்பில், 5,800 பேருக்கு கனவு இல்லத்திற்கான அனுமதி உத்தரவுகள் வழங்கப்பட்டு, வீடு கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
தற்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 70 பேருக்கு ரூ. 77 லட்சம் ரூபாய் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. கலெக்டரின் முயற்சியால், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாநில அரசின் நிதியின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 270 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். தொடர்ந்து, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில், 217 பயனாளிகளுக்கு, ரூ. 2 கோடி மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.