நாமக்கல்லில் ரயில்வே மேம்பாலம்..! இதுதான் அப்டேட்..!
மத்திய அரசின் அனுமதி பெற்ற நாமக்கல் ரெயில்வே மேம்பாலத் திட்டம்
மத்திய அரசின் அனுமதி பெற்ற நாமக்கல் ரெயில்வே மேம்பாலத் திட்டம்நாமக்கல் புறவழிச்சாலை மரூர்பட்டி பகுதியில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் தெரிவித்தார்.
நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நகர வளர்ச்சிக்காகவும் ரூ.194 கோடி மதிப்பீட்டில் நான்கு கட்டமாக புறவழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரூ.118 கோடி செலவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேந்தமங்கலம் சாலையில் உள்ள வேட்டாம்பாடி வரை இரண்டாம் கட்டப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
மரூர்பட்டியில் அமையவுள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்வதற்கான அனுமதியை இந்திய ரெயில்வே துறையிடம் கோரியிருந்தது. இந்திய ரெயில்வே வாரியத் தலைவரை நேரில் சந்தித்து எம்.பி. ராஜேஸ்குமார் மனு அளித்திருந்தார்.
மேம்பாலப் பணியும், புறவழிச்சாலையின் மூன்றாம் கட்டப் பணிகளும் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் முத்தலைப்பட்டியில் இருந்து வேட்டாம்பாடி வரையிலான புறவழிச்சாலை முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
திருச்சி சாலை முதல் வள்ளிபுரம் வரையிலான நான்காம் கட்ட புறவழிச்சாலைப் பணிக்கான நில கையகப்படுத்தல் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு தனிப் பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி மற்றும் திமுக செயலாளர் ராணா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.