பள்ளிப்பாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகேயுள்ள பாப்பம்பாளையத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பள்ளிபாளையம் அருகே, 19 வயது இளம்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் இருவம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (52) நகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஹரிணி (19) கோவையில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வந்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த ஹரிஷ் என்பவருடன் ஹரிணி காதல் உறவில் இருந்துள்ளார். இதை அறிந்த பெற்றோர் கண்டித்தும், ஹரிணி தொடர்ந்து தனது காதலனுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்துள்ளார். இதையடுத்து, ஈஸ்வரன் தனது மகளை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையத்தில் வசிக்கும் தந்தை சுப்பிரமணியத்திடம் விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர், ஈஸ்வரன் தனது மகள் மற்றும் அவரது காதலன் இருவரையும் அழைத்து பேசி, ஓராண்டில் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளார். ஆனால் நேற்று இரவு, வீட்டில் தனியாக இருந்த ஹரிணி, மின்விசிறியில் சேலையைக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உடனடியாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஹரிணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.