குமாரபாளையத்தில் இளைஞர் கொலை: அண்ணன் தம்பி இருவர் கைது
குமாரபாளையம் வாலிபர் கொலை வழக்கில் அண்ணன் தம்பி இருவர் கைது செய்யப்பட்டனர்.;
குமாரபாளையம் தம்மண்ணன் வீதியில் வசிப்பவர் அரவிந்த் (24). திருப்பூர் தனியார் நிறுவன ஊழியர். இதே வீதியில் வசிப்பவர் வெங்கடேசன், (வயது 42) தனியார் நிறுவன ஊழியர். இருவரும் நண்பர்கள். நவ. 14 ஞாயிறு அன்று திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என்று அரவிந்த் தந்தை ஜெகதீஸ் குமாரபாளையம் போலீசில் புகாரளித்துள்ளார்.
இந்நிலையில் இறுதியாக வெங்கடேஷ் வீட்டுக்கு போனதாக நண்பர்கள் கூறியதையடுத்து அதன் பின் காணவில்லை என்பதால், வெங்கடேசன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து அரவிந்த்தை கொலை செய்து விட்டாரா? என்றும், சடலத்தை கண்டுபிடித்துத்தர வேண்டியும், வெங்கடேசன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையிட்டு நேற்று பகல் 12 மணியளவில் உறவினர்களும் நண்பர்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களிடம் டி.எஸ்.பி. சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து டி.எஸ்.பி. சீனிவாசன் கூறுகையில், அரவிந்த் சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் மனைவிக்கு போன் செய்து ஆபாச வார்த்தையில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், அரவிந்தை கொலை செய்ய திட்டமிட்டு கோணி பைகள் இரண்டு வாங்கியுள்ளார்.
கடந்த நவ. 14 ஞாயிற்றுக்கிழமை அரவிந்தை தனது வீட்டுக்கு வருமாறு வெங்கடேசன் கூறியுள்ளார். வீட்டில் இருந்த பெற்றோர், மனைவி அனைவரையும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்துவிட்டார். வீட்டுக்கு வந்த அரவிந்திடம், மனைவிக்கு போன் செய்தது பற்றி கேட்டு வாக்குவாதம் செய்ததில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து வீட்டில் உள்ள 3 அடி ஆழமும், 5.5 அடி உயரமும் கொண்ட தண்ணீர் தொட்டியில் கழுத்தை தனது கைகளால் இறுக்கிய நிலையில் தொட்டியில் அழுத்தி அரவிந்தை வெங்கடேசன் கொலை செய்துள்ளனர். பின்னர் தனது தம்பி கிருஷ்ணராஜுடன், கோணிப்பையில் சடலத்தை போட்டு மூட்டை கட்டி வீட்டினுள் வைத்து விட்டனர்.
இதனையடுத்து, வெங்கடேசன் வீட்டுக்கு செல்வதாக கூறி வந்தவன் வரவில்லை என்று, நண்பர்கள் சிலர் வெங்கடேசன் வீட்டுக்கு வந்து அரவிந்த் எங்கே? என்று கேட்டுள்ளனர். அதற்கு வந்தவுடன் சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளார்.
பின்னர், சடலம் வைக்கப்பட்ட மூட்டையை பார்த்து இது என்ன? என்றும் கேட்டுள்ளனர். அதற்கு வெங்கடேசன் பஞ்சு மூட்டை என்று கூற நண்பர்கள் திரும்பி வந்துவிட்டனர்.
இந்நிலையில் நவ. 14ம் தேதி ஞாயிறு இரவு டூவீலரில் அந்த மூட்டையை வைத்துக்கொண்டு தள்ளிக்கொண்டே சென்று பழைய காவிரி பாலத்தில் மூட்டையை அவிழ்த்து சடலத்தையும் கோணி பையையும் போட்டுள்ளனர். ஒன்றும் தெரியாதவர்கள் போல் இவர்களும் நண்பர்களுடன் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷன் வந்து காணவில்லை என்று புகார் கடிதம் கொடுத்துள்ளனர். இவ்வழக்கில் அண்ணன், தம்பி இருவரும் கைது செய்யப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.