குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு
குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு நடைபெற்றது.;
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமிக்கு சிறந்த என்.சி.சி.அலுவலராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது ( கோப்பு படம்).
குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகள் என்.சி.சி. பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு ஈரோடு 15வது பட்டாலியன் சார்பில் எஸ்.எஸ்.எம்.லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. எழுத்து தேர்வுக்கு 350 மதிப்பெண்கள், செய்முறை தேர்வுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. செய்முறை தேர்வில் துப்பாக்கியை பிரித்து பூட்டுதல், பாகங்கள் கண்டறிதல், தூரத்தை கணக்கிடுதல், வரைபட பயிற்சி, அணி வகுப்பு பயிற்சி உள்ளிட்டவைகள் செயல்படுத்தி காட்டுவார்கள்.
ஈரோடு ஈரோடு 15வது பட்டாலியன் சார்பில் கமாண்டிங் அலுவலர் ஜெய்தீப், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உத்தரவின்படி சுபேதார் அன்பழகன் தலைமை வகிக்க, ஹவில்தார் விக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வினை நடத்தினர். இந்த தேர்வில் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளி, அரசு உதவி பெறும் ஜே.கே.கே. ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி, சித்தோடு அரசு மேனிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, பர்கூர் பழங்குடியினர் அரசு உண்டு உறைவிடப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 146 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். என்.சி.சி. அலுவலர்கள் அந்தோணிசாமி, சிவகுமார், நீலாம்பாள், முருகேசன், ராஜேஷ்குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த தேர்வு குறித்து என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி கூறியதாவது:-
இந்த தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் பெறுபவர்களுக்கு அரசு பணி நியமனத்தில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் உயர்கல்வி பயில 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் ராணுவம், கப்பற்படை, போலீஸ், வனத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய பணிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு மாநில அளவில் சிறப்பாக பணியாற்றும் என்.சி.சி. அலுவலர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அவர்களின் பணி, மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி, தூய்மை பணிகள், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், சமூக சேவை செயல்பாடுகள் அடிப்படையில் தேர்வு செய்யபடுவார்கள். இந்த ஆண்டு ஈரோடு 15வது பட்டாலியன் சார்பில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார் ஆணைய உதவி இயக்குனர் ஜெனரல் அட்டுல் குமார் ராஷ்டோகியால், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவரை கமாண்டிங் அலுவலர் ஜெய்தீப், லெப்டினன்ட் கர்னல்கள் கிருஷ்ணமூர்த்தி, சூரஜ் நாயர், கோவை குரூப் கமான்டர் கர்னல் சிவராவ், சுபேதார் மேஜர் செந்தில்குமார், ஹவில்தார் மேஜர் முருகன், உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இவருக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு, பி.டி.ஏ. நிர்வாகிகள், விடியல் ஆரம்பம் பிரகாஷ், என்.சி.சி. மாணவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டினார்கள்.