குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் சமூக நீதி கருத்தரங்கம்
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.;
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக நீதி கருத்தரங்கம் நடந்தது.
குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மன்ற விழா கருத்தரங்கம் முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. தமிழ் பேராசிரியர் மூர்த்தி பங்கேற்று, திருக்குறளில் மேலாண்மை என்ற தலைப்பில் பேசினார்.
அவர் பேசியதாவது:
வணிக நிர்வாகவியல் மாணவர்கள் நிர்வாகத்தில் சிறந்து விளங்க திருவள்ளுவர் கூறிய வழியில் நடக்க வேண்டும், மேலாண்மை பண்புகளான காலம் தவறாமை, தன்னம்பிக்கை, கூர்மையான சிந்தனை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கு பாடங்களை கற்பதோடு நின்று விடாமல் மற்ற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் துறைத் தலைவர் சரவணாதேவி, பேராசிரியர்கள் கண்ணன், அன்புமணி, காயத்ரி மற்றும் 130 பி.பி.ஏ. பாடப்பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர்கள், உயர்கல்வி பயில, வழிகாட்டுதல் களப்பயணம் என்ற அடிப்படையில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியர் 100 பேர், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தனர்.
இவர்களை அரசு கல்லூரி மாணவ, மாணவியர் நடனத்துடன் வரவேற்றனர். கல்லூரி முதல்வர் ரேணுகா அனைவருக்கும் மலர்கள் கொடுத்து வரவேற்றார். கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், எதற்காக இந்த பயணம்? என்பது குறித்து முதல்வர் ரேணுகா விளக்கி பேசினார். அதன் பின் வகுப்பறையில் பாடங்கள் நடத்தும் முறை, நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை நேரில் அழைத்து சென்று காட்டினர். இது குறித்து முதல்வர் ரேணுகா கூறியதாவது: அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள், அரசு கல்லூரியில் உள்ள வசதிகள், கற்றுக்கொடுக்கும் தன்மைகள் குறித்து அறியச்செய்து, அவர்களை அரசு கல்லூரியில் உயர்கல்வி பயில வைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு அரசு உத்திரவின்படி நடத்தப்பட்டது. பேராசிரியர்கள் ரகுபதி, கீர்த்தனா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான சமூகநீதி குறித்த கருத்தரங்கம் முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்ததது.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் செல்வமுத்து குமாரசாமி, சமூகநீதியின் போராளி டாக்டர் அம்பேத்கார் என்ற தலைப்பிலும்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நவீன வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் நாகூர்கனி, சமூக சீர்திருத்தத்தின் அடையாளம் பெரியார் என்ற தலைப்பில் பேசினார்கள். .
வணிகநிர்வாகவியல் துறைத்தலைவர், இணைப்பேராசிரியர் சரவணாதேவி, கீர்த்தி, ரகுபதி, ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
முதுகலை மாணவர்கள் கருத்தரங்கில் பங்குபெற்றனர். நாமக்கல் ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வந்திருந்தனர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நான் முதல்வன் திட்டங்கள் குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றி பெறும் வகையில் நான் முதல்வன் என்ற திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே நான் முதல்வன் இணைய முகப்பின் நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும்
நான் முதல்வன் இணைய முகப்பில் 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் அடங்கும். நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித் தொகைகளின் தகவல்களும் இந்த இணைய முகப்பில் உள்ளன.
நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும். அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.