குமாரபாளையத்தில் குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை
குமாரபாளையத்தில், குடும்பத் தகராறில் 2 குழந்தைகளின் தாய், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் கிழக்கு காலனி பகுதியில் வசிப்பவர்கள் சவுந்தர்ராஜன், 35, பூங்கொடி, 33, தம்பதியர். இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தையும், 5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
சவுந்தரராஜன், பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது கொரோனா காரணமாக வீட்டில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. தம்பதியர் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று காலை இருவரும் வாக்குவாதம் செய்து கொண்ட நிலையில், காலை 10:30 மணிக்கு மேல் சவுந்தர்ராஜன் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
பின்னர், நேற்று மாலை 03:00 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு வந்த சவுந்தர்ராஜன், வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது கண்டு, பவானியில் உள்ள பூங்கொடியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து, வர சொன்னார். மேலும், கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பூங்கொடி சேலையால் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததும், நேரில் வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.