பள்ளிபாளையம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்ற 4 பேர் கைது
பள்ளிபாளையம் அருகே காட்டுக்குள் வேட்டையாட முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட நபர்.
பள்ளிபாளையம் அருகே காட்டுக்குள் விலங்குகள் வேட்டையாட முயன்ற நான்கு பேரை கைது செய்த போலீசார் அனுமதியின்றி வைத்திருந்த இரண்டு நாட்டுரக துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெள்ளிக்குட்டை வனப்பகுதியில் காட்டுமான்கள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன. இவற்றை அவ்வப்போது சட்டவிரோதமாக சிலர் வேட்டையாடி வருவதாக புகார் எழுந்தது. வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் வெள்ளிக்குட்டை வனப்பகுதிக்கு நாட்டு துப்பாக்கியுடன் நான்கு பேர் செல்வதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வெப்படை போலீசார் வெள்ளிக்குட்டை வன பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட முயற்சித்துக் கொண்டிருந்த நான்கு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து அரசு உரிமம் பெறாமல் வைக்கப்பட்டிருந்த நாட்டு ரக துப்பாக்கி பறிமுதல் செய்து நான்கு பேரையும் வெப்படை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அதில் 4 நபர்களும் சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த பிரகாஷ், வெங்கடாசலம், ரமேஷ் மற்றும் சண்முகசுந்தரம் என தெரிய வந்தது இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த இரண்டு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்ததுடன் அவர்களை குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
வெள்ளிக்குட்டை வனப்பகுதியில் வன விலங்குகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வனத்துறையினரும் வன விலங்கு வேட்டையாடுபவர்களை பிடித்து வருகிறார்கள். எனவே அந்த பகுதியில் யாரும் வன விலங்கு வேட்டைக்கு செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.