குமாரபாளையத்தில் சுயேச்சைக்கு ஆதரவு கொடுக்குமா தி.மு.க., அ.தி.மு.க?
குமாரபாளையம் நகரமன்ற தலைவர், துணை தலைவர் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் 33 வார்டுகளுக்கான நகரமன்ற தேர்தலில் தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேச்சை 9 எனும் வகையில் வெற்றி பெற்றனர்.
தி.மு.க. மாவட்ட செயலரால் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்தியசீலன் அணியில் 11 பேரும், சுயேச்சையாக வெற்றி பெற்ற விஜய்கண்ணன் அணியில் 18 பேரும், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் பாலசுப்ரமணி அணியில் 4 பேரும் நேற்று முன்தினம் 3 அணிகளாக வந்து அனைவரும் பதவியேற்றுகொண்டனர். இவர்கள் வந்த வாகனங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சத்தியசீலன் மற்றும் விஜய்கண்ணன் அணியில் தி.மு.க. உறுப்பினர்களும் உள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க.வில் வென்ற உறுப்பினர்கள், கழகம் அறிவித்த தலைவர், துணை தலைவரைத்தான் வெற்றி பெறச்செய்ய வேண்டும். தன்னிச்சையாக செயல்படுகிறவர்கள் மீதும், கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நேற்று வரை அதரவு தெரிவித்தவர்கள் முதல்வரின் இந்த அறிக்கைக்கு பின் என்ன முடிவு செய்யவுள்ளனர் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. வழக்கமாக அரசியல் கட்சியினர்தான் சுயேட்சைகளை ஆதரவு கேட்டு அழைப்பார்கள். ஆனால் குமாரபாளையத்தில் இதுவரை இல்லாத வகையில், சுயேச்சை உறுப்பினர் அரசியல் கட்சியினரை தன் வசப்படுத்தி நகரமன்ற தலைவராக முயற்சிப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகையில், அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் நகரமன்ற தலைவர், துணை தலைவர் பொறுப்பிற்கான படிவம் வழங்கப்படும். அதில் அவர்கள் அனைவரும் ஆட்சேபனை இல்லை என்று ஒருவரை குறிப்பிட்டால் அவர் நகரமன்ற தலைவராக ஏக மனதாக தேர்வு செய்யப்படுவார். ஆட்சேபம் உள்ளது என படிவத்தில் குறிப்பிட்டால் தேர்தல் நடத்தப்பட்டு தலைவர், துணை தலைவர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்தல் நடைபெறும்போது நகரமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கூட்ட அரங்கில் அனுமதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.