புள்ளாகவுண்டம்பட்டி: கணவனை கொன்ற வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் கைது
புள்ளாகவுண்டம்பட்டியில், கணவனை கொன்ற வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தேவூர் அருகே புள்ளாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் தயானந்தன், தனது தந்தை செய்த பைனான்ஸ் தொழிலை தொடர்ந்து செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தேவூர் அருகே தண்ணிதாசனூர் பகுதியை சேர்ந்த, சின்னபையன் மகன் முகேஷ் என்கிற முருகன் வயது 21 என்பவர், வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார்.
வட்டி கட்டுவதற்கு அவ்வப்போது புள்ளாகவுண்டம்பட்டியில் இருக்கும் தயானந்தன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த தயானந்தனின் மனைவி அன்னபிரியாவுக்கும் முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு, தயானந்தன் வீட்டிற்கு வந்த முருகன், அன்னபிரியாவுடன் தனிமையில் இருந்துள்ளனர். இதை பார்த்த தயானந்தன் கண்டித்தார். அன்ன பிரியா பயன்படுத்தி செல்போனை வாங்கி சிம்கார்டை எடுத்துவிட்டார். இதனால் ஆவேசமடைந்த அன்னபிரியா, கள்ளகாதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொல்ல திட்டமிட்டார்.
அதன்படி, வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை முடக்கிவிட்டு, நேற்றிரவு கணவன் தயானந்திற்கு நிலவேம்பு கசாயத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தூங்கச் செய்தார். பின்னர், கள்ளக்காதலன் முருகனை வரவழைத்து, தூங்கிக்கொண்டிருந்த தயானந்தன் தலையின் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர், தன் கணவருக்கு வலிப்பு வந்து கட்டில் மீது விழுந்து காயமேற்பட்டு இறந்துவிட்டதாக நாடகமாடினார். ஆனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சங்ககிரி டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் இன்ஸ்பெக்டர் தேவி, தேவூர் சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமாரன் உள்ளிட்ட போலீசார், மனைவி அன்னபிரியாவிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி உண்மையை வரவழைத்தனர்.
முடிவில், தயானந்தன் கொலை வழக்கில் மனைவி அன்னபிரியா, மற்றும் கள்ளக்காதலன் முருகன் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.