ஆட்டம் ஆரம்பம்: குமாரபாளையத்தில் நகரமன்ற தலைவர், துணை தலைவர் யார்?
குமாரபாளையத்தில் நகரமன்ற தலைவர், துணைத்தலைவர் பதவியை சுயேச்சைகள் ஆதரவுடன் கைப்பற்ற திமுக, அதிமுக போட்டி.
குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகளில் நடைபெற்ற நகரமன்ற தேர்தலில் தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேச்சை 9 வார்டுகளில் வெற்றி பெற்றனர். 8வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் சத்தியசீலன் நகரமன்ற தலைவர் என மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி அறிவித்தார்.
தி.மு.க.வில் வெற்றி பெற்ற 14 பேருடன், 3 சுயேச்சை அதரவு பெற்றால் போதும் என இருந்த நிலையில், திமுகவில் வெற்றி பெற்ற சிலர், சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் விஜய்கண்ணனுக்கு ஆதரவாக போனதாக கூறப்படுகிறது.
எப்படியாவது பேசி திமுகவில் வெற்றி பெற்றவர்களை அழைத்து வாருங்கள் என்றும், நகர்மன்ற துணை தலைவர் பதவி கூட திமுகவினராகத்தான் இருக்க வேண்டும் என்று தற்போது வெற்றி பெற்ற திமுக உறுப்பினர்கள் திமுக மூத்த நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அ.தி.மு.க. 10 பேருடன் 7 சுயேச்சையினரை சேர்த்து நகரமன்ற துணை தலைவர் பதவியை பெற முயற்சி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப மாவட்ட நிர்வாகி எஸ்.எஸ்.எம் புருஷோத்தமன் மற்றும் முன்னாள் நகர்மன்ற தலைவராக இருந்த பாலசுப்ரமணி இருவரது பெயர்கள் துணை தலைவர் பொறுப்புக்கு கூறப்பட்டு வருகிறது.
தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம் கூறுகையில், தி.மு.க. சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் மனசாட்சியுடன் மாவட்ட தி.மு.க. சொல்லும் நபருக்குத்தான் அதரவு தர வேண்டும் என்று கூறினார்.
சத்தியசீலனும் சுயேச்சை வெற்றியாளர்களிடம் தனக்கு அதரவு தர வேண்டி நேரில் சென்று கேட்டு வருகிறார்.
குமாரபாளையம் நகராட்சியாக ஆனதிலிருந்து ரகுராமன், சுயம்பிரபா மாணிக்கம், ஜகன்நாதன், சேகர் ஆகிய திமுகவினர்தான், அ.தி.மு.க. ஆட்சியிலும் நகரமன்ற தலைவராக இருந்துள்ளனர். கடந்த நகரமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று, அதிமுகவில் இணைந்து, அ.தி.மு.க. நகரமன்ற தலைவராக சிவசக்தி தனசேகரன் நகரமன்ற தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என தி.மு.க.வினரும், வந்த இடத்தை தக்க வைத்துகொள்ள துணை தலைவர் பதவியாவது பெற வேண்டும் என அ.தி.மு.க.வினரும் முயற்சி செய்து வருகின்றனர்.
மார்ச் 2ல் பதவி பிரமாண நிகழ்வில் அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.