பவானி பகுதியில் விடிய விடிய கனமழை: அந்தியூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
பவானி பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து அந்தியூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் தேங்கியது. பெருக்கெடுத்த வெள்ளத்தால் அந்தியூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொட்டிபாளையம், ஊராட்சிகோட்டை, செலம்பகவுண்டம்பாளையம், சீதபாளையம், தாளகுளம், சங்கர கவுண்டன்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தாழ்வான பகுதிகளை சூழ்ந்தது. தொட்டிப்பாளையம் ஊராட்சி பழைய காலனி பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.
வயல்வெளிகளில் வடிந்த தண்ணீர் பவானி, அந்தியூர், கோட்டை தொட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே ரோட்டை கடந்து சென்றது. முழங்கால் அளவுக்கு மழைநீர் ரோட்டை கடந்து சென்றதால் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. தண்ணீர் ஓரளவு வடிந்த பின்னர் போக்குவரத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
மழை பெய்து கொண்டிருந்த போது பவானியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்ற கார் நிலை தடுமாறி தொட்டிபாளையம் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த நால்வர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதில் மின் கம்பம் முறிந்து சேதமானது. பவானி வட்டார பகுதிகளில் பெய்த மழைநீர் காடையாம்பட்டி ஏரிக்கு பெருக்கெடுத்து வந்ததால் ஏரிக்கரையோரம் பாதையில் வெள்ள நீர் சூழ்ந்தது. ஏரிக்கரை ஒட்டிய அங்கன்வாடி மையம் தண்ணீரால் சூழப்பட்டது. அங்கிருந்த விவசாய தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகள், ஆடுகள் தண்ணீரில் தத்தளித்தன. இதை கண்ட பொதுமக்கள் அவைகளை பத்திரமாக மேடான பகுதிக்கு கொண்டு வந்தனர். சம்பவ இடத்தில் பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.