குமாரபாளையம் ஆற்று பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
குமாரபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் மீனவர்களால் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம், பவானி-குமாரபாளையம் இணைக்கும் விதமாக காவிரி ஆற்றின் குறுக்கே நான்கு பாலங்கள் உள்ளன. காவிரி ஆற்றில் தற்போது இரு கரையை தொட்டவாறு தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது.
இதனை பயன்படுத்தி குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பழைய காவிரி பாலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்து வருகிறார்கள்.
அப்போது தங்களது டூவீலர்களை பாலத்தின் மீதே நிறுத்தி விட்டு மீன் பிடிகின்றனர். மீன் பிடிப்பதை பார்க்க பொதுமக்கள் பலரும் தங்கள் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பாலத்தின் மீது நிறுத்தப்படுவதால் குறுகலான பாதையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்துகளும் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். மீன் பிடிக்க தடை விதிப்பதோடு இருசக்கர வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்த தடை விதிக்க வேண்டும்.