குலுக்கல்முறையில் வீட்டுமனை பரிசு: தடுப்பூசி போட ஆர்வத்துடன் திரண்ட மக்கள்

மக்களின் ஆர்வம், ஆவல் காரணமாக பகல் 12 மணிக்கே பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது

Update: 2021-09-19 15:45 GMT

பவானி வர்ணபுரத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் முதியோருக்கு வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

பவானியில் வீட்டுமனை அறிவிப்பால் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர்.

தடுப்பூசி முகாம்கள், நகர் பகுதியில் விழிப்புணர்வு அதிகம் காணப்படும் நிலையில் கிராமங்களில் தடுப்பூசி மீதான ஆர்வம் சற்று குறைவாகவே காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள , ஆர்வத்தை தூண்டும் வகையில் பவானி தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை, தங்க காசு, வெள்ளி விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என வருவாய்த்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்காக பவானி ஒன்றியத்தில் 39 மையங்களிலும், அம்மாபேட்டை ஒன்றியத்தில் 63 மையங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதனால் 12 மணிக்கே பல்வேறு பகுதிகளில் தடுப்பூசிகள் தீர்ந்து போயின. தாமதமாக வந்தவர்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இம்முகாம்களில், 10 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. வயது முதிர்ந்தவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், வீடு தேடி சென்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இம்முகாமில் ஊசி போட்டுக்கொண்ட பொதுமக்களுக்கு வரும் (செப்.22) புதன்கிழமை  குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.


Tags:    

Similar News