காலியாக உள்ள அதிமுக நகர செயலர் பொறுப்பு: கட்சியினர் எதிர்ப்பார்ப்பு

குமாரபாளையத்தில் காலியாக உள்ள அதிமுக நகர செயலர் பொறுப்புக்கு யார் நியமனம் செய்யப்படுவார்கள் என கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.;

Update: 2022-03-18 14:00 GMT

பைல் படம்.

குமாரபாளையம் நகரில் அ.தி.மு.க. நகர செயலர் பதவி அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாகும். அ.தி.மு.க. உருவாக எம்.ஜி.ஆர். ஆலோசனை கூட்டம் நடத்தியது சென்னையில் உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த எஸ்.எஸ்.எம். குடும்ப வீடு என்பதும், பெரியவர் சுப்பிரமணி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரம் செய்ய தொடங்கும் முன் குமாரபாளையம் நகர செயலராக எஸ்.எஸ்.எம். குடும்பத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். குமாரபாளையத்தில் பாலகிருஷ்ணன் அ.தி.மு.க. நகர செயலராக பொறுப்பேற்ற பின், நகரின் வளர்ச்சிக்கு மிகவும் உதவினார் என்றால் அது மிகையில்லை.

அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது திருச்செங்கோடு தொகுதியில் இருந்த குமாரபாளையம் நகரில், அப்போதைய அமைச்சர் பொன்னையன் தலைமையில், குமாரபாளையம் நகரில் முதன் முதலாக 35 போர்வெல் போடப்பட்டு, மேல்நிலை தொட்டி கட்டி தண்ணீர் விநியோகம் செய்து தண்ணீர் பிரச்சனையை நகர செயலர் பாலகிருஷ்ணன் தீர்த்து வைத்தார். தற்போதைய போலீஸ் ஸ்டேஷன் இடத்தில் இருந்த பஸ் ஸ்டாண்டை, வாரச்சந்தையாக இருந்த தற்போதைய பஸ் ஸ்டாண்ட் இடத்திற்கு மாற்றினார்.

வாரச்சந்தை சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றம் பொதுமக்களுக்கு மிகவும் இன்றளவும் உதவியாக இருந்து வந்தது. இவரையடுத்து பந்தல் முருகேசன், எஸ்.எஸ்.எம். குமணன், என்பவர்கள் நகர செயலராக பொறுப்பேற்று பணியாற்றினர். இவர்களையடுத்து நாகராஜன் நகர செயலராக பொறுப்பேற்று தற்போதைய முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மூன்று தேர்தல்களில் பணியாற்றி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

அமைச்சர் தங்கமணி குமாரபாளையம் தொகுதிக்கு அரசு கலை கல்லூரி, தாலுக்கா அலுவலகம், பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நிதி உதவி பெற்று தந்தது, மாநிலத்தில் முதன் முறையாக புதைவட மின் கம்பிகள் அமைத்தது உள்ளிட்ட எண்ணற்ற உதவிகளை செய்தார். கொரோனா காலத்தில் நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கட்சி பாகுபாடு இல்லாமல் உணவுபொருட்கள் வழங்க நகர செயலர் நாகராஜன், எஸ்.எஸ்.எம். குடும்பத்தில் உள்ள புருஷோத்தமன் உதவியாக இருந்தனர்.

தற்போதைய நகராட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் விஜய்கண்ணனுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மூன்று பேர் ஆதரவு கொடுத்து நகரமன்ற தலைவராக வர உதவியதால், 3 பெண் கவுன்சிலர்கள், அவரது கணவர்கள் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்ததாக நகர செயலர் நாகராஜன் ஆகிய 7 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தலைமை கழகத்தால் நீக்கப்பட்டனர்.

தற்போது குமாரபாளையம் நகர அ.தி.மு.க. நகர செயலர் பொறுப்பு காலியாக உள்ளது. யார் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பபடுவார்கள் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாகராஜன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பில் இருந்த போது, துணை செயலராக இருந்து திருநாவுக்கரசு கட்சியை வழிநடத்தி வந்தார். மாவட்ட செயலராக உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி யாரை நியமிக்க உள்ளார் என்பது கட்சியினரிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News