குமாரபாளையத்தில் உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த நாள் விழா
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
சுதந்திர போராட்ட தியாகிகள், தமிழ் சான்றோர்கள், அறிவியல் மேதைகள் உள்ளிட்ட பல முக்கிய நபர்களின் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில் குமாரபாளையம் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ் தாத்தா எனப்படும் உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்த நாள் விழா, அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கம்பன் நகரில் இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெற்றது. உ.வே.சா.வின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேச்சு, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு விடியல் பிரகாஷ் மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர் பிரியதர்ஷினி பரிசாக புத்தகங்களை வழங்கினர். அழியும் நிலையில் உள்ள பல தமிழ்க் காப்பியங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை புதிய முறையில் புத்தகமாக வடிவமைத்துக் கொடுத்தவர் உ..வே.சாமிநாத ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் தனசேகர், கிருஷ்ணா உள்பட பலர் பங்கேற்றனர்.