நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: குமாரபாளையத்தில் தயார் நிலையில் ஓட்டுச்சாவடிகள்
குமாரபாளையம் நகரமன்ற தேர்தலையொட்டி 73 ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தமிழக உள்ளாட்சி தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது முதல் வேட்புமனு தாக்கல், பரிசீலனை, திரும்ப பெறுதல், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி, பூத் சிலிப் வழங்கும் பணி ஆகியன நடைபெற்றன.
இதையடுத்து, 73 ஓட்டுச்சாவடி மையங்களில் சேர்கள், டேபிள்கள் அமைத்தல், மின் விளக்கு வசதி அமைத்தல், சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல், வாக்காளர்கள் வரிசையில் நிழலில் நின்று வாக்களிக்க எதுவாக சாமியானா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றன.
அனைத்து ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு அலுவலர்கள், போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஓட்டுப்பதிவு செய்யும் அறையில் வாக்காளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இடைவெளி விட்டு நிற்பதற்கு ஏற்ப வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. மண்டல அலுவலர்கள் ஒவ்வொரு ஓட்டுப்பதிவு மையத்திற்கும் சென்று தேவையான பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த பணிகளை நகராட்சி கமிஷனர் சசிகலா, பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. செல்வராஜ் உள்ளிட்ட பலர் ஆய்வு செய்தனர்.