தி.மு.க அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
குமாரபாளையத்தில் தி.மு.க அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது;
தி.மு.க அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.
குமாரபாளையத்தில் தி.மு.க அரசின் ஈராண்டு ஆட்சி சாதனைவிளக்க பொதுகூட்டம் நகர செயலர் செல்வம் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலர் மதுரா செந்தில் பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது:
தமிழகத்தின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், "பத்தாண்டுகால இருண்ட ஆட்சியை விரட்டி, நாம் விடியல் தருவோம் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை தந்து, ஆட்சி செய்வதற்கான அனுமதியை வழங்கினார்கள். ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, அவர்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே 7ம் நாள் முதல் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது நமது அரசு.
மக்களுக்கான திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. அந்தத் திட்டங்களின் பலன்களை மக்கள் உணரும்படி எடுத்துரைக்க வேண்டியது கழக உடன்பிறப்புகளின் கடமை. உங்களில் ஒருவனாக - உங்களின் உடன்பிறப்பாக அந்தக் கடமையை அடிக்கடி காணொளி வாயிலாக நிறைவேற்றி வருகிறேன். மே 2ம் நாள்கூட, ‘உங்களில் ஒருவன்’ காணொளியை வெளியிட்டு, அதில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளையும், அரசியல் எதிரிகள் வைக்கின்ற ஆதாரமற்ற விமர்சனத்திற்கான பதில்களையும் அளித்து, கழக உடன்பிறப்புகள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன், என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
காலத்திற்கேற்ற அறிவியல் வளர்ச்சியும், புதிய தொழில்நுட்பமும் அடிக்கடி காணொளி வாயிலாக உங்களிடம் உரையாற்றச் செய்திருக்கிறது. அதேநேரத்தில், நமது திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் திரிபு வேலைகளைச் செய்யக்கூடிய அரசியல் கட்சியினர், நம் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், உண்மையை உரக்கச் சொல்லவும், அரசியல் காழ்ப்புணர்வாளர்களின் வதந்திகளையும் அவதூறுகளையும் முறியடிக்கவும் நாமும் காணொளி வாயிலாகப் பதில் தர வேண்டியுள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் என்று மதுரா செந்தில் பேசினார்.
கூட்டத்தில் மாநிலசொத்து பாதுகாப்புகுழு உறுப்பினர் .மாணிக்கம், மாவட்ட கழக பொருளாளர் ராஜாராம் தலைமைசெயற்குழு உறுப்பினர் செல்வராஜ் நகர்மன்றத்தலைவர் விஜயகண்ணன் துணைத்தலைவர் வெங்கடேசன் முன்னாள் நகர கழகசெயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள் நகர கழக நிர்வாகிகள், மாவட்ட சார்புஅணியினர்கள் நகர இளைஞரணி, மகளிர்அணி, மாணவரணி நிர்வாகிகள் மற்றும் சார்புஅணியினர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் , கழகத்தோழர்கள் கூட்டணிகட்சியினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்... இறுதியில் மாவட்ட விளையாட்டு அணி துணையமைப்பாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.