குமாரபாளையத்தில் லாரி மோதி 2 பேர் பலி.. க்ரைம் செய்திகள்..

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் லாரி மோதியதில் மொபெட்டில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

Update: 2022-12-14 15:45 GMT

குமாரபாளையத்தில் சாலையின் தடுப்பில் மோதி நின்ற டேங்கர் லாரி.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்:

லாரி மோதி இருவர் பலி:

சேலம் மாவட்டம், இடைப்பாடி வட்டம், ஏரிக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 60), நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (52). இருவரும், கட்டிட தொழிலாளிகள். நேற்று காலை 7:45 மணியளவில் சேலம்-கோவை புறவழிச்சாலை பகுதியில் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் ஒருவரும் ஒரு மொபெட்டில் சென்று கொண்டிருந்தனர்.

ங்கராஜ் வாகனத்தை ஓட்ட, அருணாசலம் பின்னால் அமர்ந்து இருந்தாராம். அப்போது கோவை சாலையில் இருந்து வந்த லாரி மொபெட் மீது மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீஸார், லாரி ஓட்டுநரான ஓசூரை சேர்ந்த பெருமாள் (22) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நின்ற நிலை தடுமாறிய டேங்கர் லாரி:

சேலம் மாவட்டம், வீரக்கல்புதூர் அருகேயுள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 35). டேங்கர் லாரி ஓட்டுநர். இவர் நேற்று மாலை 1 மணியளவில் பள்ளிபாளையம் சாலையில் லாரியை ஓட்டிச் செனறு கொண்டிருந்தார். காலனி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென நிலை தடுமாறிய டேங்கர் லாரி பவானி தனியார் பள்ளி வேன் மீதும், டெம்போ ஸ்டாண்டில் நின்ற சரக்கு வாகனம் மீதும் மோதியபடி பள்ளிபாளையம் பிரிவு சாலையில் இருந்த தடுப்பு மீது ஏறி நின்றது.

இதனால் வாகன ஓட்டிகள், அக்கம் பக்கம் இருந்த வியாபாரிகள் அச்சமடைந்தனர். இதுதொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் லாரியில் ஏற்பட்ட பிரேக் பழுது காரணம் என தெரிய வந்தது.

அனுமதியின்றி மது விற்றவர் கைது:

குமாரபாளையம் அருகே எதிர்மேடு வாய்க்கால் கரை அருகே அனுமதி இல்லாமல் சிலர் மது விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீஸார் அங்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அங்கு ஒருவர் அனுமதியின்றி மது விற்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டம், கோவிந்தமங்களம் பகுதியை சேர்ந்த சூரசங்கு (28) என்பது தெரியவந்தது. சூரசங்கை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

செல்போன், பணம் திருட்டு:

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, காப்ரா மலை பகுதியில் வசிப்பவர் துரையரசன் (வயது 27). இவர் ஆனங்கூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் தனது வீட்டின் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தாராம்.

அப்போது, அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு இளைஞர்கள் திடீரென துரையரசன் தனது பைக்கில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரொக்கம் 15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News