குமாரபாளையத்தில் நிதி நிறுவன கெடுபிடி குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை
குமாரபாளையத்தில் நிதி நிறுவன கெடுபிடியால் கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் நிதி நிறுவன கெடுபிடியால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து ஆர்டிஓ சுகந்தி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
குமாரபாளையத்தில் நிதி நிறுவன கெடுபிடியால் கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதால், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் கேட்டும் சி.பி.எம் . சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்ததையடுத்து, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
குமாரபாளையம் வட்டமலை ஜோதி,நகரில் வசிப்பவர் விசைத்தறி தொழிலாளி ஞானசேகரன் (வயது47.) இவர் சில நிதி நிறுவனங்களில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதனை திரும்ப செலுத்த முடியவில்லை. நிதி நிறுவன நிர்வாகிகள் தொடர்ந்து இவரிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஞானசேகரன் நேற்றுமுன்தினம் மதியம் 12:00 மணியளவில் தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் . மனைவி மகாலட்சுமி மற்றும் மகன் கலையரசு , மகள் தனப்பிரியா ஆகியோர்களை காப்பாற்ற வேண்டி தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நிதி நிறுவன கெடுபிடியால் கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதால், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் கேட்டும் சி.பி.எம் . சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழக விவசாயிகள் சங்க செயலாளருமான படைவீடு பெருமாள் தலைமையில் இரவில் கண்டன ஆர்ப்பாட்டம் போலீஸ் நிலையம் முன்பு நடந்தது.
இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் டி.எஸ்.பி, இமயவரம்பன், ஆர்.டி.ஓ. சுகந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, நிதி நிறுவன அலுவலர்கள், இறந்தவர் குடும்பத்தார், சி.பி.எம்.கட்சியினர், மக்கள் நீதி மய்யம் மகளிரணி அமைப்பாளர் சித்ரா, தி.மு.க. ரவி, விடியல் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இது பற்றி சி.பி.எம் . சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழக விவசாயிகள் சங்க செயலருமான படைவீடு பெருமாள் கூறியதாவது:-
நிதி நிறுவன அலுவலர்கள் காலை 09:00 மணி முதல், மாலை 06:00 மணி வரை மட்டுமே வசூல் பணியில் ஈடுபட வேண்டும், பணம் வாங்கியவர்கள் இரண்டு தவணை செலுத்தாத பின்தான் அவரிடம் பணம் வசூலுக்கு போக வேண்டும், தீபாவளி வரை வசூலுக்கு போக கூடாது, பெண்கள், குழந்தைகளை போட்டோ எடுத்து மன உளைச்சல் ஏற்படுத்த கூடாது, விதிமுறை மீறினால் சட்டபூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என ஆர்.டி.ஓ. சுகந்தி மற்றும், டி.எஸ்.பி. இமயவரம்பன் அறிவுறுத்தியுள்ளனர். அனைத்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவன நிர்வாகிகளை அழைத்து, பணம் கொடுத்தல், வசூல் செய்தல் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்கள் எடுத்துரைக்க விரைவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளது, நிதி நிறுவன நிர்வாகிகளால் தற்கொலை செய்து கொண்ட நபரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் கொடுக்கவும் மாவட்ட கலெக்டர் வசம் பரிந்துரை செய்யப்படும் எனவும் ஆர்.டி.ஓ. சுகந்தி கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.