விதி மீறி செல்லும் அரசு பஸ்கள் - போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
குமாரபாளையத்தில், விதிகளை மீறி செல்லும் அரசு பஸ்களால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இருந்து நெடுங்குளத்திற்கு, 9 எண் கொண்ட அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இது, இடைப்பாடி சாலை வழியாக, பஸ் ஸ்டாண்ட் வராமல், பஸ்கள் வெளியே வரும் வழியில், விதிமீறி செல்கிறது. இதனால், பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியில் வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் நெரிசல் ஏற்படுகிறது.
பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் உள்ள டெம்போ, டூரிஸ்ட் வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள், சேலம் சாலைக்கு வர முடியாமல் சிரமம் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அரசு பஸ்களே, இவ்வாறு விதிகளை மீறி செயல்படுவது, அதிருப்தி அளிப்பதாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, இது போன்ற விதிகளை மீறும் ஓட்டுனர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, இடைப்பாடி சாலை வழியாக சென்று பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.