குமாரபாளையத்தில் போக்குவரத்து போலீசார் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
குமாரபாளையத்தில் போக்குவரத்து போலீசார் ஊரடங்கு மற்றும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கு ஞாயிறு அன்று அமல்படுத்தப்படவுள்ளது. குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர். அதில் முகக் கவசம் அணியாமல் வந்த ஓட்டுனர்களிடம் முகக் கவசம் அணிந்து வாகனம் ஓட்ட அறிவுறுத்தினர்.
மேலும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஆட்கள் வந்தால் சமூக இடைவெளி பின்பற்றுங்கள் என அறிவுறுத்தினர். கிருமிநாசினி அடிக்கடி பயன்படுத்த கேட்டுக்கொண்டனர். கண்ணாடி தூக்கி விடப்பட்டு இருக்கும்போது எதுக்கு முக கவசம் அணிய வேண்டும் என்று கேட்ட நபர்களுக்கு அறிவுரை கூறி அபராதம் விதித்தனர்.
ஊரடங்கு நாளில் அவசியம் இல்லாமல் வாகனங்களை எடுத்துக்கொண்டு வெளியில் வராதீர்கள் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்குவரத்து எஸ்.ஐ., வெங்கடேசன், ஏட்டுக்கள் சுகுமார், ராதாகிருஷ்ணன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.