குமாரபாளையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
குமாரபாளையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.;
குமாரபாளையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் சித்ரா, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
குமாரபாளையம் சேலம் -கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. புறவழிச்சாலையில் வரும் வாகனங்கள் இருபுறமும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ஆனால் கத்தேரி பிரிவு பகுதியில் பிளெக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்கள், கடை விளம்பரங்கள் என ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், வாகனங்கள் செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.
இதனால் அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்று ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுவதுடன், வழக்கமாக இந்த வழியில் அன்றாட வேலைக்கு செல்பவர்கள், வட்டமலை, எதிர்மேடு பகுதியில் உள்ள எண்ணற்ற கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர், குமாரபாளையம் ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல்களை ஏற்றி வரும் லாரிகள், இதர கடைகளுக்கு சாமான்கள் ஏற்றிவரும் சரக்கு வாகனங்கள், சேலம், திருசெங்கோடு, சங்ககிரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பேருந்துகள் குமாரபாளையம் நகரிலிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள், என பலதரப்பட்ட வாகனங்கள் செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இந்த பகுதியில் இருபுற சர்வீஸ் சாலையில் எந்த போக்குவரத்து போலீசாரும் நின்று போக்குவரத்து சரி செய்வது இல்லை.
ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் நிலை மாற, உடனே இந்த இருபுற சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், போக்குவரத்து போலீசார் சிப்ட் முறையில் செயல்பட்டு, இரவு பகலாக போக்குவரத்து சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.