சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்கள் அச்சம்
குமாரபாளையம் சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் அச்சமடைகிறார்கள்.;
குமாரபாளையம் சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.
குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த சாலைகளில் மாடுகள், குதிரைகள் என கால்நடைகள் பல இடங்களில், சாலைகளின் நடுவில் செல்வதால், வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. சாலையில் நடந்தும், மற்றும் டூவீலர்களில் செல்லும் பொதுமக்களும் அச்சமடைந்து வருகிறார்கள். இது போல் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற கால்நடைகள் பறிமுதல் செய்து கோசாலைகளில் ஒப்படைக்க வேண்டும்.
குமாரபாளையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட் கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு, அம்மா உணவகம் பகுதியில் அனைத்து பஸ்களும் வந்து பயணிகளை ஏற்றியும், இறக்கியும் சென்று வருகிறது. தற்காலிக பஸ் ஸ்டாண்டில் போதிய இட வசதி இல்லாததால், சில நிமிடங்கள் கழித்து புறப்பட வேண்டிய பஸ்கள், இடைப்பாடி சாலையில் வரிசையாக நிறுத்தப்படுகிறது. இதனால் இடைப்பாடி சாலையிலிருந்து சேலம் சாலைக்கு வரும் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதனால் சேலம் சாலையிலிருந்து இடைப்பாடி சாலைக்கு வரும் வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் வளைவில் எதிர் எதிராக வருவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல வெகு நேரம் ஆகிறது.
இதே போல் சேலம் கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடப்பதால், அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்படுகிறது. இதனால் இரு புறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி, மேம்பால கட்டுமான பணிகள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றாகிவிட்டது. ஆயினும் அதுவரை, கத்தேரி பிரிவில் இருபுறமும், போலீஸ் ஸ்டேஷன் பிரிவிலும், பஸ் ஸ்டாண்ட் நுழைவுப்பகுதியிலும் போலீசார் நியமிக்கப்பட்டால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சற்று சிரமமின்றி சென்று வர உதவியாக இருக்கும்.