குமாரபாளையத்தில் திருமண மண்டப கூடுதல் கட்டிடம் திறப்பு
குமாரபாளையத்தில், திருமண மண்டப கூடுதல் கட்டிடத்தை, எம்.எல்.ஏ. தங்கமணி திறந்துவைத்தார்.
குமாரபாளையத்தில் அங்காளம்மன் கோவில் பின்புறம், காவிரி கரையில் செங்குந்தர் மண்டப கூடுதல் கட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவு பெற்று, திருமண மண்டபத்தின் கூடுதல் கட்டிட திறப்பு விழா, சிறப்பு யாகம் ஆகியன நடைபெற்றன. திருமண மண்டப கூடுதல் கட்டிடத்தை, முன்னாள் அமைச்சரான, எம்.எல்.ஏ. தங்கமணி திறந்து வைத்து, யாகத்தில் பங்கேற்றார்.
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதிக்கு வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம், செங்குந்த சமுதாய திருமண மண்டப நிர்வாகிகள், மண்டபத்தில் சிமெண்ட் அட்டை போடப்பட்ட இடத்தில் கான்கிரீட் தளம் அமைத்து கூடுதல் கட்டிடம் கட்டித்தர கோரிக்கை வைத்தனர்.
அதனை நிறைவேற்றி தருவதாக எம்.எல்.ஏ. தங்கமணி வாக்குறுதி கொடுத்தார். அதன்படி எம்.எல்.ஏ.தங்கமணியின் பங்களிப்புடன் மண்டபத்தின் கூடுதல் கான்கிரீட் கட்டிடம் கட்டப்பட்டதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.