காவிரியில் மீன் பிடிக்கச் சென்றவர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்
குமாரபாளையம் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயமானதால் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை சானார்பாளையம் பகுதியில் வசிப்பவர் லட்சுமணன், 45. மீன் பிடிக்கும் தொழில் செய்து வருபவர். இவர் நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் காவிரி ஆற்றுக்கு மீன் பிடிக்க சென்றார்.
வழக்கமாக மாலை 3 மணியளவில் வீடு திரும்பும் இவர், வீடு திரும்பாததால் குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் நேரில் வந்த மீட்புக்குழுவினர் காவிரி ஆற்றங்கரையில் பரிசல் மட்டும் இருப்பதை கண்டனர்.
ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று எண்ணி, மாலை 6 மணி வரை தேடி பார்த்தனர். இருள் சூழ்ந்த நிலையில் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றி அவரது மனைவி லட்சுமி, 39, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது பற்றி குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்வதால் மீன் பிடிக்க இயலவில்லை. ஆகவே லட்சுமணன் தோட்டா போட்டு மீன் பிடிக்க எண்ணி தோட்டாவை பற்ற வைக்க, எதிர்பாரத நிலையில், அது இவர் கையில் வெடித்தது. இதனால் இவர் மயக்கமடைந்த நிலையில் தண்ணீரில் விழுந்தார். நீரின் வேகம் அதிகம் இருந்ததால் அவர் உடல் அடித்து செல்லப்பட்டது. இரு நாட்களாக தீயணைப்பு படையினர் தேடியும் சடலம் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.