தி.மு.க. செயல்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் பேச மறுப்பு

உக்ரைன் போரில் சிக்கிய மாணவர்கள் மீட்பது தொடர்பான தி.மு.க. செயல்பாடு குறித்து பேச முன்னாள் அமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.

Update: 2022-03-01 14:45 GMT

குமாரபாளையம் வளையக்காரனூர் சபரி பிரதீப் என்ற மாணவனின் பெற்றோருக்கு தங்கமணி அறுதல் கூறினார். 

உக்ரைன் நாட்டில் படிக்கும் குமாரபாளையம் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் சொல்ல வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்களை மீட்பதில் தி.மு.க. செயல்பாடு குறித்து பேச முன்னாள் அமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், குமாரபாளையம் வட்டமலை இளங்கோ மகன் மாணவன் சூர்யா உக்ரைன் நாட்டில் இரண்டாம் ஆண்டு டாக்டர் படிப்பு படித்து வருகிறார். சூர்யாவுடன் போனில் பேசினேன். பாதுகாப்பாக இருப்பதாகவும், சூர்யா மற்றும் நண்பர்கள் தாயகம் திரும்ப பஸ் ஏறி விட்டதாகவும் கூறினர். பெற்றோர்களும் தைரியமாக உள்ளனர்.

இதே போல் வளையக்காரனூர் சுப்ரமணி மகன் சபரி பிரதீப் அதே நாட்டில் டாக்டர் படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். அவரும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, உக்ரைன் போரில் சிக்கிய மாணவர்கள், பொதுமக்கள் மீட்பு பணியில் தி.மு.க. செயல்பாடு எந்த அளவில் உள்ளது என நிருபர்கள் கேட்டபோது,  அதற்கு பதிலளிக்காமல், நாங்கள் எதிர்க்கட்சி; உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட நபர்கள் எங்கு உள்ளனரோ அங்கெல்லாம் அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பி ஆறுதல் சொல்லி வாருங்கள் என அனுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் கூறியதால் ஆறுதல் சொல்ல வந்துள்ளோம். இங்கு கிடைக்கும் தகவல்கள் சேகரித்து, மத்திய அரசிடம் தெரிவித்து பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்வோம் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Tags:    

Similar News