குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தங்கமணி வாக்கு சேகரிப்பு
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஏப். 19ல் லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நடப்பதையொட்டி அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையத்தில் நட்சத்திர பேச்சாளர்களாக தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.
இந்நிலையில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட செயலாளருமான தங்கமணி, அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒவ்வொரு பகுதியிலும் வேட்பாளருக்கு பொது மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
வாக்கு சேகரிப்பின்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
மூன்றாண்டு கால தி.மு.க ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுமே கஷ்டப்படும் நிலைதான் நிலவுகிறது. குறிப்பாக விசைத்தறி தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலைவாசியும் உயர்ந்து விட்டது. ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளது இந்த விடியா அரசு..கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் மின் கட்டணமும் உயரவில்லை, விலைவாசியும் உயரவில்லை,
கொரோனோ காலத்தில் கூட எந்த விலைவாசியும் உயராமல் மக்களை பாதுகாத்த அரசு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு. ஆனால் தி.மு.க வின் மூன்றாண்டு கால ஆட்சியில் அனைத்தையும் உயர்த்தி விட்டது. குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை தான் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. அ.தி.மு.க வேட்பாளரின் எண்ணமே மக்களுக்கு சேவை செய்வது ஒன்று தான்.
நாங்கள் மக்களுக்கு செய்த திட்டங்களும் சேவைகளை சொல்லி வாக்குகள் கேட்போம் .ஆனால் தி.மு.க.வினர் எதனை சொல்லி ஓட்டு கேட்பார்கள். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சாவும் போதை பொருட்களும் தான் அதிகமாக உள்ளது..அதே போல லாட்டரி விற்பனை அமோகமாக உள்ளது.கடந்த அ.தி.மு.க ஆட்சியில் காவேரியில் தண்ணீர் நிற்காமல் வந்தது.
ஆனால் தி.மு.க காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக்கொண்டு காவிரியில் தண்ணீரை பெற்று தராமல் உரிமையை விட்டுக் கொடுத்து விட்டது. இதனால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தமிழகத்தில் உள்ள இந்த தி.மு.க அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் விஜய்சரவணன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், குமாரபாளையம் நகர செயலாளர் நாராயணசாமி, ஒன்றிய செயலாளர் பாலு, தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, கோட்டைமேடு ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.