குமாரபாளையத்தில் டெம்போ, டூவீலர்கள் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்
குமாரபாளையத்தில், டெம்போ, டூவீலர்கள் மோதிய விபத்தில் மூவர் படுகாயம் அடைந்தனர்.;
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன், 60. விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், 52. விவசாயி. இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் டி.வி.எஸ். எக்ஸல் டூவீலரில் ராஜேந்திரன் ஓட்ட, செல்வகுமார் பின்னால் உட்கார்ந்து வந்துள்ளனர்.
குமாரபாளையம் வரும் வழியில், பள்ளிபாளையம் பழைய டீ கடை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, எதிரே வந்த ஈச்சர் டெம்போ வாகன ஓட்டுனர், இவர்கள் வந்த டூவீலர் மீதும், இவர்களுக்கு பின்னால் வந்த ஹீரோ ஹோண்ட டூவீலர் ஓட்டுனர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றார்.
குமாரபாளையம் போலீசார் விசாரணையில் ஹீரோ ஹோண்டா வாகனம் ஓட்டி வந்தவர், பவானியை சேர்ந்த ரத்தினம், 45, என்பது தெரியவந்தது. மூவரும் பலத்த அடிபட்ட நிலையில் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான டெம்போ வாகனத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.