குமாரபாளையத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பள்ளிப்பாளையம் ஒன்றிய செயற்குழு கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பள்ளிப்பாளையம் ஒன்றிய செயற்குழு கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பள்ளிப்பாளையம் ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் கண்ணன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் முருகசெல்வராசன் பங்கேற்று பேசினார்.
மத்திய அரசு பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை தொடக்கநிலை ஆசிரியருக்கு 2006, ஜூன் 1, முதல் வழங்கிட வேண்டும், தமிழ்நாடு அரசாங்கம் சட்டமன்றத்தேர்தல் வாக்குறுதியின் படி தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை 2003, ஏப். 1 முதல் தொடர்ந்திட வேண்டும். ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து விடுப்பூதியம் பெறும் முறையை தமிழ்நாடு அரசு தொடர்ந்திட வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை பள்ளி ஆசிரியருக்கு தொடர்ந்து வழங்கிட வேண்டும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு மாநில பணிமூப்பு முறையை திணிக்கும் அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும். பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர், நடுநிலைப்பள்ளித்தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி என்பதை கைவிட வேண்டும்,
தமிழ்நாட்டின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி டிட்டோஜாக் மாநில அமைப்பு எதிர்வரும் செப். 10ல் மேற்கொள்ளும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பது,இதே கோரிக்கைகளுக்காக வரும் செப். 29,30, அக். 1, ஆகிய மூன்று நாள்கள் டிட்டோஜாக் மாநில அமைப்பு மேற்கொள்ளும் சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பது, மாநிலத்தின் தனித்துவமான கல்விக்கொள்கையை வகுக்கும் நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழுவின் பரிந்துரை அறிக்கை அனைத்துப்பகுதி மக்களும் அறியும் வகையில் ஒளிவு மறைவற்ற வகையில் வெளியிடப்பட வேண்டும், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றியச்செயலாளர் இளையராஜா, தகவல்தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் இரவிக்குமார், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்டத்துணைச் செயலாளர் வடிவேல், மாவட்ட தகவல்தொழில் நுட்ப அணியின் மாவட்ட அமைப்பாளர் தண்டபாணி, ஒன்றிய பொருளாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.