குமாரபாளையம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் நியமனம்
குமாரபாளையம் தாலுகா அலுவலகத்திற்கு, புதிய வட்ட வழங்கல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் அலுவலராக முன்பு, வசந்தி பணியாற்றி வந்தார். இவர் பயிற்சி தாசில்தாராக சென்ற பின், மோகனா நியமனம் செய்யப்பட்டார். இவர் பணியில் சேர்ந்து இரு மாதங்கள் ஆன நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பணியிட மாறுதலில் சென்றார்.
இதையடுத்து தற்போது, குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலராக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்திரவின்பேரில், சித்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை, தாசில்தார் தமிழரசி, ஒ.ஏ.பி. தாசில்தார் சிவகுமார், உதவி தாசில்தார் காரல் மார்க்ஸ், தலைமை நில அளவையர் ரமேஷ், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், செந்தில்குமார், தியாகராஜன், ஜனார்த்தனன் உள்பட பலர் வாழ்த்தினர்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு வட்ட வழங்கல் அலுவலர் நியமனம் செய்யப்படுவதால் பல பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட் கார்டு வழங்குதல், ரேசன் பொருள் விநியோகம் செய்தல், வயதானவர்கள் பயோ மெட்ரிக் முறைக்கு பதிலாக கடிதம், ரேசன் கடைகளில் பொருட்கள் இருப்பு வைத்தல், ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. இதனால், வட்ட வழங்கல் அலுவலர், குறைந்தது இரண்டு வருடமாவது பணியாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.