சுயம்வரம் நிகழ்ச்சியில் திரண்ட எதிர்கால மணமக்கள்..! முன்னாள் அமைச்சர்கள் வாழ்த்து..!

குமாரபாளையத்தில் நடந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் வரன்தேடுவோர் தங்கள் பிள்ளைகளுடன் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர்கள் நேரில் வாழ்த்தினர்.

Update: 2023-09-24 15:30 GMT

குமாரபாளையத்தில் பெற்றோர்கள் திரண்ட நிலையில் நடந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் நேரில் வாழ்த்தினர்.

குமாரபாளையத்தில் பெற்றோர் முன்னிலையில் நடந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் நேரில் வந்து திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்து உறுதிசெய்யப்பட்ட மணமக்களை வாழ்த்தினர்.

தேவாங்கர் எழுச்சி இயக்கம் சார்பில் சுயன்வரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் நீண்ட வருடங்களாக திருமணம் தள்ளி போகும் நிலையில் உள்ளவர்கள், முதல் திருமணம் ரத்து செய்யப்பட்டு இரண்டாவது திருமணத்திற்காக காத்திருப்பவர்கள், வசதி உள்ளவர்கள், வசதி இல்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் பெருமளவில் பங்கேற்றனர்.

இந்த சுயம்வரம் நிகழ்சசியில் தங்களுக்கு பொருத்தமான மணமகன் அல்லது மணமகள் ஆகியோரை தேர்வு செய்து பெற்றோர் மற்றும் பிள்ளைகளுடன் பேசி இறுதி செய்யப்பட்டது அவ்வாறு இறுதி செய்யப்பட்டு திருமணத்துக்கு தயாரான மணமக்களை  முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்திப்  பேசினார்கள்.

இது பற்றி நிர்வாகிகள் கூறும்போது :-

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் திருமண வயதை அடைந்து விட்டால், நல்ல வரன் அமைய வேண்டும் என அனைத்து தெய்வங்களிடம் வேண்டிக் கொள்வார்கள். சில தரகர்கள் ஜாதகத்தை கூட மாற்றி அமைத்து திருமணம் நடத்தி வைப்பார்கள். காலப்போக்கில் அது சரிவராமல், பாதியில் இருவரும் பிரியும் நிலை ஏற்படும்.

இப்படிப்பட்டவர்கள் துயர் துடைக்க இது போன்ற சுயம்வரம் மிக உதவியாக இருக்கும் என நம்பினோம். மன்னர் ஆட்சி காலத்தில் இருந்த வழக்கம் தற்போது மிகவும் உதவியாக உள்ளது. பெற்றோர்கள் மணமகன், மணமகள் ஆகியோரை நேருக்கு நேர் சந்தித்து, கேட்க வேண்டிய சந்தேகங்கள் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டு திருமணம் செய்து வைப்பதால், எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் வர வாய்ப்பில்லாமல் போகிறது.

மேலும் எங்கும் அலையவேண்டிய அவசியம் இல்லை. ஒரே இடத்தில் தங்களுக்கு பிடித்தவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். பெண் குடுமபத்தார் மற்றும் மாப்பிள்ளை குடும்பத்தார் நேரில் அமர்ந்து பேசிக்கொள்கின்றனர்.இங்கு உறுதி செய்த பின்னர் மற்ற வழக்கமான நடைமுறைகளை அவர்கள் செய்துகொள்கிறார்கள். அதனால் இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில்  பங்கேற்ற பெற்றோர்கள் மன நிறைவுடன் செல்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News