குமாரபாளையத்தில் சாலையை கடக்க மாணவர்கள் அவதி; நடைமேம்பாலம் அமைக்க கோரிக்கை
குமாரபாளையத்தில் மாணவ, மாணவியர்கள் விபத்துக்களை தவிர்க்க நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை உள்ளது. இரு பள்ளிகளிலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
தினமும் காலை பள்ளிக்கு செல்லும் போதும், மாலை பள்ளி முடிந்த பின்பும் ஆனங்கூர் பிரிவு சாலையை கடந்துதான் மாணவ, மாணவியர்கள் செல்ல வேண்டியுள்ளது. இந்த பிரிவு சாலை பகுதி தாழ்வான பகுதி என்பதால், வாகனங்கள் அனைத்தும் வேகமாக வந்து கடந்து செல்கிறது.
இதனால் தினமும் விபத்தில் சிக்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் பல மாதங்கள் செயல்படாத நிலையில், தற்போது பள்ளிகள் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன. தினமும் காலை, மாலை வேளைகளில் சாலையை கடப்பது மாணாக்கர்களுக்கு பெரும் சிரமத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
எனவே இதனை தவிர்க்கவும், மாணவ, மாணவியர்கள் பாதுகாப்பாக சாலையை கடக்கவும் ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் நடை மேம்பாலம் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.