குமாரபாளையம் அரசுப்பள்ளியின் சாலையோர கழிவறையால் மாணவிகள் கடும் அவதி
குமாரபாளையம் அரசுப்பள்ளியின் உயரம் குறைந்த சாலையோர கழிவறையால் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ளதால் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, ரேவதி, உஷா, சுஜாதா கூறுகையில், குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்புற சுற்றுச்சுவர் அருகே வடிகால் கோம்பு பள்ளம் பாலம் புதியதாக, உயரமாக கட்டப்பட்டது. இதன் அருகில் உள்ள சுற்றுச்சுவர் உள்புற பகுதியில் மாணவிகள் கழிவறை உள்ளது.
பாலம் உயரமாக கட்டப்பட்டதால், பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் குறைந்து இந்த சாலை வழியாக செல்லும் அனைவரும் மாணவிகள் கழிவறையை எளிதில் காணும் வகையில் அமைந்துள்ளது. இதனால் பல விஷமிகள், இந்த கழிவறை அருகே கழிவறைக்கு வரும் மாணவிகளை கிண்டல், கேலி செய்து வரும் நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் மாணவிகள் கழிவறை செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி, மன உளைச்சலுக்கு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசி, குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி, குமாரபாளையம் டி.எஸ்.ஒ., குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சசிகலா, போலீஸ் ஸ்டேஷனில் பெண் எஸ்.ஐ. மலர்விழி என அனைவரும் பெண்களாக நிர்வகித்துவரும் நிலையில் இந்த பிரச்சனை கண்டுகொள்ளாதது வேதைனை அளிக்கிறது.
எனவே மாணவிகளின் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மாணவிகளின் பெற்றோர்களும் நிம்மதியடைவார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.