குமாரபாளையம் ஸ்டேட் வங்கியில் ஆட்கள் பற்றாக்குறை : கொரோனா பரவும் அபாயம்

குமாரபாளையம் ஸ்டேட் வங்கியில் ஆட்கள் பற்றாக்குறையால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

Update: 2021-09-18 16:45 GMT

ஸ்டேட் வங்கி, குமாரபாளையம்.

ஸ்டேட் வங்கியில் ஆட்கள் பற்றாக்குறையால் ரேசன் கடையினர் அவதி - கொரோனா பரவும் அபாயம் 

குமாரபாளையம் ஸ்டேட் வங்கியில் ஆட்கள் பற்றாக்குறையால் ரேசன் கடையினர் அவதிக்குள்ளாகி வருவதுடன், கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

ரேசன் கடைகள், டாஸ்மாக் உள்ளிட்ட பல துறை பணியாளர்கள் தினமும் வசூலாகும் தொகையினை குமாரபாளையம் ஸ்டேட் வங்கியில் செலுத்தி வந்தனர். சில வாரங்களாக குமாரபாளையம் ஸ்டேட் வங்கியில் பணம் பெறும் கவுண்டரில் ஒரு நபர் மட்டுமே பணம் பெற்று வரவு வைத்து வருவதாக தெரிகிறது. 

இது பற்றி ரேசன் கடை பணியாளர்கள் கூறியதாவது:

கடையில் வசூலாகும் தொகையினை தினமும் குமாரபாளையம் ஸ்டேட் வங்கியில் செலுத்த மேலதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளோம். அதன்படி தொகையை வங்கியில் செலுத்தி வந்தோம். சில வாரங்களாக குமாரபாளையம் ஸ்டேட் வங்கியில் பணம் பெறும் கவுண்டரில் ஒரே நபர் மட்டும் பொதுமக்களிடம் பணம் பெறும் பணியை செய்து வருகிறார். இதனால் கூட்டம் அதிகம் கூடும் நிலை உருவாகி வருகிறது. எங்களுக்கு எவ்வித சிறப்பு சலுகையும் கிடையாது.

பொதுமக்கள் நிற்கும் வரிசையில் நின்றுதான் பணம் செலுத்த வேண்டும். குறைந்த பட்சம் பணம் செலுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகின்றது. பொதுமக்கள் ரேசன் கடையில் பொருட்கள் வாங்க வரிசையில் காத்திருந்தாலும், நாங்கள் எவ்வளவு நேரம் ஆனாலும் பணம் செலுத்திய பின்னர்தான் கடைக்கு சென்று பொருள் விநியோகம் செய்ய வேண்டும். இதனால் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என கூறினார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து வியாபார நிறுவனத்தார்களை சமூக இடைவெளி பின்பற்ற சொல்லியும், அவ்வாறு பின் பற்றாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. ஒரு பணியாள் மூலம் ஸ்டேட் வங்கியில் பணம் வசூலிப்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இங்கு எவ்வித கொரோனா தடுப்பு நடவடிக்கையும் பின்பற்றப்படுவதில்லை. வங்கியில் ஆட்கள் பற்றாக்குறையே இந்த குறைகளுக்கு காரணம் என தெரியவருகிறது. வங்கியில் பணம் செலுத்த தாமதம் ஆவதால் ரேசன் கடை பணியாளர் கடைக்கு திரும்புவதற்ற்கு தாமதம் ஆகிறது. இதனால் ரேசன் கடையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் சேர்ந்துவிடுகிறது. கூட்டம் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் ரேசன் கடைகளிலும் ஏற்படுகிறது. 

 இதுகுறித்து பொதுமக்கள் வங்கியில் கேட்டபோது, வேலைக்கு ஆள் பற்றாக்குறை உள்ளது. நாங்களும் பலமுறை உயர் அதிகாரிகளுக்கு கூறிவிட்டோம். விரைவில் ஆட்கள் போடுவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். அதுவரை மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். முடிந்தவரை நாங்களும் கூட்டம் கூடாமல் இருப்பதற்கும்,சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் என்று வங்கி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குமாரபாளையம் ஸ்டேட் வங்கியில் அதிக பணியாளர்களை  நியமித்து பொதுமக்களின் வங்கிப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News