பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் வைகாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.;
வைகாசி சனிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், விட்டலபுரி ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பொதுவான கருத்து
சனிக்கிழமையும் ஏகாதசியும் இணைந்த நாளில், பெருமாளுக்கு துளசிமாலை சார்த்தி வழிபடுவோம். நம் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து அருளுவார் ஸ்ரீமகாவிஷ்ணு.
சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உகந்த நாள் என்றும் பெருமாளை வணங்கி வழிபடுவதற்கு உரிய நாள் என்றும் போற்றப்படுகிறது. அதனால்தான் மற்ற நாட்களை விட சனிக்கிழமைகளில், திருப்பதி முதலான பெருமாள் குடிகொண்டிருக்கும் கோவில்களில் வழக்கத்தை விட மக்கள் குவிகிறார்கள்.
சனிக்கிழமைகளில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் துளசி தீர்த்தம் பருகுவதும் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. அதேபோல், குடும்பத்தில் ஏதேனும் வேண்டுதல் செய்பவர்கள், அதாவது குடும்பத்தில் நல்லது நடக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்து, மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் அல்லது பதினொரு ரூபாய் முடிந்து வைப்பார்கள். பெருமாளை மனதில் நினைத்து, சனிக்கிழமைகளில் வேண்டிக்கொண்டு, மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்து பிரார்த்திக்கிற பக்தர்களும் இருக்கிறார்கள்.
அதேபோல ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். அதாவது வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என்று வரும். இந்த இரண்டு ஏகாதசிகளுமே, பெருமாள் வழிபாட்டுக்கு உரிய திதிகளாகப் போற்றப்படுகின்றன. ஏகாதசியில் விரதம் தொடங்கி மறுநாளான துவாதசியில் விரதத்தை பூர்த்தி செய்கிற பெருமாள் பக்தர்களும் இருக்கிறார்கள்.
சனிக்கிழமை என்பதும் திருமால் வழிபாட்டுக்கான நாள்தான். ஏகாதசி திதி என்பது பெருமாளை வழிபடுவதற்கு உரிய நாள்தான். இந்த இரண்டு விஷயங்களும் இணைந்து வருகிற நாள், இன்னும் நல்ல அதிர்வுகள் கொண்ட நாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சனிக்கிழமையில் பெருமாளுக்காக விரதம் மேற்கொள்பவர்களும் ஏகாதசியில் விரதம் இருக்கிற பெருமாள் பக்தர்களும் மும்மடங்குப் பலன்களைப் பெறுவதாக ஐதீகம். பெருமாளுக்கு விளக்கேற்றி வேண்டிக்கொண்டு, காலை அல்லது மாலை வேளையில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசி மாலையும் தாயாருக்கு வெண்மை நிற மலர்களும் சார்த்தி கண்ணாரத் தரிசித்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவார் வேங்கடவன். மங்கல காரியங்களில் இருந்த தடைகளையெல்லாம் நீக்கித் தந்தருளுவார் மகாலட்சுமி தாயார்.
முடிந்தால் இந்த நன்னாளில், பெருமாளுக்கு புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பிரார்த்திப்பதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து பூஜிப்பதும் இழந்த செல்வங்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.