காவிரியை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரைகள்: மீன்கள் இறக்கும் அபாயம்
ஆற்றில் அதிக அளவில் ஆகாயத்தாமரை செடிகள் இருப்பதினால் ஆற்றுநீர் விஷத்தன்மை கொண்டதாக மாறும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில், ஈரோட்டை இணைக்கும் பழைய பாலம், புதிய பாலம் என இரண்டு உள்ளன. இந்த பாலத்தின் கீழ் செல்லும் காவிரி ஆற்றில், சுற்றிலும் நீரை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரை வளர்ந்து, மாதக்கணக்கில் அதிக அளவில் பரவிக்கிடக்கிறது.
ஆகாயத்தாமரைகள் படர்ந்து, ஒரே இடத்தில் தேங்கி கிடப்பதால், மீன்கள் சுவாசிக்க முடியாத நிலை உள்ளது. இந்தச் செடிகள் தொடர்ச்சியாக பரவும் பட்சத்தில், மீன்கள் பிராணவாயு குறைந்து இறக்கும் அபாயம் உள்ளது. அத்துடன், ஆகாயத்தாமரைக்கு இடையே ஆற்றில் கழிவுகள் தேங்கி, துர்நாற்றமும் வீசுகிறது.
காவிரி ஆற்றுநீரை குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் பொதுமக்களுக்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆகாயத்தாமரைகளால் ஆறு மாசுபட்டு கிடப்பது, பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது. எனவே, காவிரி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை, போர்க்கால அடிப்படையில் அகற்றி, காவிரி ஆற்று நீரை பாதுகாக்க வேண்டும் என பள்ளிப்பாளையம் பகுதி மக்களும், இயற்கை ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.