அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை
குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் செவிலியர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
பைல் படம்
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் நகரில் 33 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை உள்ளனர். பல ஆண்டுக்கு முன்னர் இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப, நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தற்போது ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் தினமும் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சில நாட்கள் முன்பு, இரவில் விபத்தில் அடிபட்ட ஒருவரை அவரது நண்பர் இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, செவிலியர்கள் பணியில் இருந்தும், தலையில் காயமடைந்த இடத்தில் தூய்மை பணியாளர் ஒருவரை விட்டு, தையல் போட சொன்னதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இது குறித்து தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது: செவிலியர்கள் பற்றாகுறை உள்ளது. இருப்பினும் நாங்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் இங்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சை வழங்கி வருகிறோம். கட்டு போடுதல், சிகிச்சையின் போது உடனிருத்தல் ஆகிய பணிகளை அவ்வப்போது தூய்மை பணியாளர்கள் விட்டு செய்ய சொல்வது நடந்து வருகிறது. ஆனால், அடிபட்ட இடத்தில் தையல் போடுதல், ஊசி போடுதல் உள்ளிட்ட பணிகளை செவிலியர்கள் தான் செய்து வருகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.