குமாரபாளையம் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் பாதிப்பு: மக்கள் கடும் அவதி

குமாரபாளையம் ரேஷன் கடைகளில் சர்வர் பழுதால் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட்டது.;

Update: 2021-10-12 15:45 GMT

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம்.

குமாரபாளையம் நகரில் உள்ள 22க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, ஆயில், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் நியாய விலையில் வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். நேற்று காலை முதல் மாலை வரை அனைத்து கடைகளிலும் சர்வர் பழுதால் ரேகைப் பதிவு செய்ய முடியாமல் போனது.

இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். பொதுமக்கள் வேலை செல்லும் இடத்தில் அனுமதி கேட்டு ரேஷன் பொருட்கள் வாங்க வருகின்றனர். அடிக்கடி இது போல் நடப்பதால், பொதுமக்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவன உரிமையாளரிடம் அடிக்கடி அனுமதி கேட்கும் நிலை உருவாகிறது.

சில இடங்களில் இதே காரணத்தை சொல்லி விடுப்பு எடுப்பது அனுமதிக்க முடியாது என்று அனுமதி மறுக்கப்படும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் மட்டுமே வாங்கி பல ஆயிரம் குடும்பத்தினர் வாழ்ந்து வரும் நிலையில், இது போல் சர்வர் பழுது காரணமாக பொதுமக்களை அலைக்கழிக்கும் நிலைக்கு தள்ளாமல், எப்போதும் சீராக சர்வர் செயல்படும்படி வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Tags:    

Similar News