சரபங்கா நதி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்: மக்கள் உற்சாகம்
தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளத்தில், பொதுமக்கள் உற்சாக குளியல் போட்டு மகிழ்கின்றனர்.;
சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் சரபங்கா நதி, ஓமலூர் தாரமங்கலம் சின்னப்பம்பட்டி எடப்பாடி வழியாக கடந்து சென்று, தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் தண்ணீர் நிறைந்து, வழிந்தோடி அண்ணமார் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் ஒன்றோடொன்று கலந்து செல்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், தேவூர் சரபங்கா நதி தண்ணீர் நிரம்பி வழிந்து ஆர்ப்பரித்து, அருவி போல தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதனைக் கண்டு தேவூர், எடப்பாடி சுற்றுவட்டார மக்கள் ஆர்வமுடன் குடும்பத்துடன் என்று குளியல் போட்டு மகிழ்கின்றனர். தடுப்பணையில் சறுக்கல் விட்டு விளையாடுவது, துணி துவைப்பது மற்றும் தண்ணீரில் பல்வேறு விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, தீபாவளி விடுமுறை ஞாயிற்றுக்கிழமை தினத்தில், அருகாமையில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து வாகனங்களில் வந்து தண்ணீரை பார்வையிட்டு குறும் படம், செல்பி போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். தேவூர் சரபங்காநதி தடுப்பணை பொழுதுபோக்கு இடமாக உள்ளதால், தடுப்பணை பகுதியில் சிறிய பாலம் மற்றும் பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.