சாமி விளக்கால் ஏற்பட்ட தீ விபத்து: பல்வேறு தரப்பினர் நிதியுதவி

குமாரபாளையத்தில் வீட்டிலிருந்த சாமி விளக்கால் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-08-12 15:15 GMT

தீவிபத்து ஏற்பட்ட வீடு.

குமாரபாளையம் முருங்கைகாடு பகுதியில் வசிப்பவர் ஜெயக்கொடி, 33. ஓட்டல் கடையில் பாத்திரம் கழுவும் வேலை செய்து தன் மகள் அபிராமியை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்க வைத்து வருகிறார். நேற்று பகல் 11:30 மணியளவில் இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த துணிமணிகள், பீரோ, தையல் மெசின், பாத்திரங்கள் யாவும் சேதமாகின. அக்கம் பக்கம் உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை போராடி அணைத்தனர். குமாரபாளையம் தீயணைப்பு படையினர் வந்து, ஏற்கெனவே தீ அணைக்கப்பட்டதால் திரும்பி சென்றனர்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இது குறித்து ஜெயக்கொடி கூறியதாவது: வீட்டில் சுவாமிக்கு விளக்கு ஏற்றி வைத்து விட்டு நான் வேலைக்கும், மகள் பள்ளிக்கும் சென்று விட்டோம். எப்படியோ விளக்கு விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி தகவலறிந்த அந்த வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பழனிசாமி நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கி, முன்னாள் அமைச்சர் தங்கமணி இரண்டொரு நாளில் வருவதாகவும் கூறினார். பொதுநல அமைப்பின் தலைவர் வக்கீல் தங்கவேல் ஆயிரம், விடியல் பிரகாஷ் இரண்டாயிரம், தலா இரு செட் துணி, தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் தலைவர் மாதேஷ் தலா இரு செட் துணி, ரொக்க உதவி, ஸ்ரீராம் கார்மெண்ட்ஸ் சார்பில் துணிகள் ஆகியன வழங்கப்பட்டன.

Tags:    

Similar News